ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘பாம்’. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே மற்றும் கிச்சா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை பி.எம். ராஜ்குமார் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பை டி. இமான் வழங்கியுள்ளார். இப்படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறியதாவது: “இது முழுக்க முழுக்க நகைச்சுவை மையமாக உருவாக்கப்பட்ட படம். ஒரு கற்பனை கிராமத்தில் நடைபெறும் ஒரு சிக்கலையே இப்படத்தின் கருவாக கொண்டுள்ளோம். அந்த கிராமத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்த கிராம மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். இப்படிச் சிதைந்த அந்த சமூகத்தை மீண்டும் ஒன்றுபடுத்த இரு நண்பர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதையே படத்தின் கதையாக்கமாக கொண்டுள்ளோம். இந்த இரண்டு நண்பர்கள் வேடங்களில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது” என தெரிவித்துள்ளார்.