கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படத் துறையில் வரலாற்று மற்றும் புராண அடிப்படையிலான சில திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில், இப்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘கண்ணப்பா’. இந்த படத்தை நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, ‘பாகுபலி’ திரைப்படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் போன்ற பிரபலமான நடிகர்களும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, இந்தப் படத்தில் மோகன்லால் நடிக்கும் ‘கிராதா’ என்ற கதாபாத்திரம் மற்றும் அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியாகி பெரும் சுவாரசியத்தை உருவாக்கியது. இந்த நிலையில், நாயகனாக நடித்த விஷ்ணு மஞ்சு, மோகன்லாலின் கதாபாத்திரம் குறித்து கூறும்போது, “இந்தப் படத்தில் மோகன்லால் அறிமுகமாகும் காட்சி இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் அந்த காட்சி திரையரங்கையே அதிர வைக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்காத விதமாக அது அமையும் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, “முதலில் இந்தக் கதையை எழுதும்போது ஒரு சிறிய கதாபாத்திரத்தை தேவையில்லை என நினைத்து நீக்கியிருந்தோம். பிறகு பாகுபலி கதாசிரியரான விஜயேந்திர பிரசாதிடம் இந்தக் கதை பற்றி கூறியபோது, அந்த நீக்கிய கதாப்பாத்திரத்தைப் பற்றியும் சொல்லினோம். அப்போது அவர், ‘அந்த கதாப்பாத்திரம் இல்லாமல் கதையில் தெளிவு இருக்காது; அது முக்கியமானது’ என விளக்கினார். அப்போதுதான் அந்தக் கதாப்பாத்திரத்தை நீக்கியது தவறு என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதன்பின் அந்தக் கதாப்பாத்திரத்தை மீண்டும் சேர்த்தோம். அதுவே இன்று மோகன்லால் நடித்துள்ள ‘கிராதா’ கதாப்பாத்திரம் என்று தெரிவித்தார்.