நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் கேரளாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பதை அறிந்த கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று அவரை சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல மலையாள நடிகரும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் திறமையாக நடித்துவருபவருமான கோட்டயம் நசீர் சமீபத்தில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் தொடர்ந்து காமெடி, குணச்சித்திரம், வில்லன் ஆகிய பல்வேறு கதாப்பாத்திரங்களில் கலக்கி வருபவர் கோட்டயம் நசீர். சமீபத்தில் வெளியான ‘தலைவன்’, ‘ஆலப்புழா ஜிம்கானா’ போன்ற படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஓவியக் கலைஞராகவும், மிமிக்ரி கலைஞராகவும் புகழ்பெற்ற இவரது அனுபவங்களை ‘ஆர்ட் ஆஃப் மை ஹார்ட்’ என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தை ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் சந்திக்கும்போது, அந்த புத்தகத்தை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
“நான் ஓவியராக இருந்தபோது, ரஜினிகாந்தின் பல படங்களை வரைந்துள்ளேன். பின்னர் மிமிக்ரி கலைஞராக மாறியபோது, அவர் குரலில் நகைச்சுவை செய்து பல மேடைகளில் நடித்தேன். இன்று அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது என் வாழ்க்கையின் கனவு நிறைவேறிய தருணமாக இருக்கிறது. கடவுள் என் வாழ்க்கையில் எழுதிய திரைக்கதைக்கு ஒரு அழகான முடிவை இழைத்துள்ளார் எனக் கூறலாம்” என உருக்கமாகப் பகிர்ந்துள்ளார் நசீர். அந்த புத்தகத்தில் இடம்பெற்ற ஓவியங்களை ரஜினிகாந்த் பொறுமையாகப் பார்த்து, நசீரை பாராட்டியதாக கூறப்படுகிறது.