தெலுங்கில் வரலாற்றுப் பின்னணியில் ஆன்மிக கதையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கண்ணப்பா’. இந்தப் படத்தை மிகப் பிரபலமான மகாபாரத தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இத்திரைப்படம், சிவபெருமானைத் தீவிரமாக பக்தி செய்யும் கண்ணப்பரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக ஜூன் 27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தக் கதையை காமிக்ஸ் வடிவமாக வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது அந்தக் காமிக்ஸ் பதிப்பின் மூன்றாவது அத்தியாயம் படக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.