இந்திய சினிமாவின் தந்தையாகக் கருதப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதலாவது திரைப்படமான ‘ராஜா ஹரிஷ்சந்திரா’வை 1913ம் ஆண்டில் தயாரித்து இயக்கியவர். மேலும் பல திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். 1870ம் ஆண்டு பிறந்த அவர், 1944ம் ஆண்டு காலமானார். இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்தி அதை வளர்ப்பதில் அவர் செய்த பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவருடைய பெயரால் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

அவரை மையமாகக் கொண்டு பயோபிக் படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ராஜமவுலி, அவரது மகன் கார்த்திகேயா மற்றும் மேக்ஸ் ஸ்டுடியோஸின் வருண் குப்தா ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்தப் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை தயாராகிவிட்டதாகவும், அந்தக் கதையை கேட்ட ஜூனியர் என்டிஆர், இப்படத்தில் தாதா சாகேப் பால்கேவின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் படம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் ‘வார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இவை முடிந்த பிறகு தான் பால்கேவின் பயோபிக் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இவை தற்போது பேச்சுவார்த்தை நிலைமையிலேயே உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ முடிவுகள் பின்னர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.