ஒரு பிரபல மீடியா நிறுவனம் நடத்திய ‘ஹடில்’ நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் அனுராக் காஷ்யப், பலதகவல்களை பகிர்ந்தார். அதில் விஜய் சேதுபதியைப் பற்றிய அவர் கூறிய ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனுராக் காஷ்யப் கூறியதாவது: “‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்திற்கு பிறகு நான் பல தென்னிந்திய படங்களை நிராகரித்தேன். அந்த நேரத்தில் எனக்கு தினமும் புதிய வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. என் ‘கென்னடி’ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் விஜய் சேதுபதியை அடிக்கடி சந்தித்தேன்.
அப்போது அவர், தனது கையில் ஒரு சிறந்த கதை இருப்பதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். தொடக்கத்தில், நான் அதை நிராகரித்துவிட்டேன். ஆனால் எனது ‘கென்னடி’ படத்திற்கு அவர் உதவினார். அதற்காக நன்றியாக அவரது பெயரை அந்த படத்தில் குறிப்பிட்டேன்.அப்போது நான் அவரிடம், ‘அடுத்த ஆண்டு என் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால் அதன் செலவுகளை நான் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை’ என்று கூறினேன். உடனே விஜய் சேதுபதி, ‘நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’ என்று உறுதியளித்தார் என்று கூறியுள்ளார்.