பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தைக் கொண்டாடும் நாளை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் சிறப்பாக சாதித்தவர்களை மதிப்பளிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையிலே, 2025ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாருக்கும் மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அஜித் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில துணை முதலமைச்சரான பவன் கல்யாணும் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
“பத்மபூஷன் விருதைப் பெற்ற பிரபல நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் ‘குடும்பம்’, ‘காதல் கதை’ போன்ற பல்வேறு வகை திரைப்படங்களில் நடித்துத் தன்னுடைய தனிப்பட்ட நடிகர் திறமையை நிரூபித்துள்ளார். திரையுலகில் தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ளார். கார் பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். அவருக்கு மேலும் பல வெற்றிகள் கிடைக்க என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.