மூணாறு பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் இருவரும் பயிற்சி மருத்துவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த சம்பவத்தை விசாரிக்க கல்லூரி நிர்வாகத்தினர், மும்பையில் பேய் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஆதியை அழைக்கின்றனர். ஆதி, தனக்கே உரிய ஒரு சிறப்பு கருவியின் மூலம் ஆவிகளின் சப்தத்தை அடையாளம் காணும் முயற்சியில் இறங்குகிறார்.
அப்போது, அந்த மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றும் லட்சுமி மேனன், இந்த தற்கொலைகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்கிடையில், மூன்றாவது மருத்துவ மாணவரும் தற்கொலை செய்து கொள்கிறார். அதுவும் நடந்த இடத்தில் லட்சுமி மேனன் இருப்பது ஆதிருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பின்னர் என்ன நடக்கிறது? இந்த தொடர்ச்சியான தற்கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்? இதற்கு உண்மையான காரணம் என்ன? என்பது இந்த படத்தின் மீதிக்கதை.
ஈரம் படத்தில் தண்ணீரின் மூலம் பேயை காட்டிய இயக்குநர் அறிவழகன், இந்தப் படத்தில் சப்தத்தின் மூலம் பேயின் ஆதிக்கத்தைக் காட்டியுள்ளார். ஆனால், இது ஈரம் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. பொதுவாக, ஹாரர் படங்களில் காணப்படும் சில சிக்கலான டெம்ப்ளேட் முறைபாடுகள் இதில் இருந்தாலும், அதைத் தாண்டி, இயக்குநர் சப்தம் என்ற ஒரு புதுமையான கருத்தை கொண்டு வந்திருக்கிறார்.
வழக்கமான பேய் திரைப்படமாக இல்லாமல், ஒரு விஞ்ஞான பூர்வமான கருத்தை கொண்டு, அதற்கான நியாயமான விளக்கங்களை இயக்குநர் தனது ஆராய்ச்சியின் மூலம் திரைக்கதையில் உறுதியுடன் பதிவு செய்துள்ளார். இதனால், படம் ஒரு புதிய அனுபவமாக உருவாகியுள்ளது.”ஹாரர் படம் என்றால் ஆதியை அழைக்கலாம்” என்று சொல்லும் அளவுக்கு, பேய்க்கதைக்கு தேவையான சரியான முகபாவங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், கதாநாயகிக்குள் பேய் புகுந்துவிடும் என்ற கதைக்களத்திற்கு ஏற்ப, நடிகையின் உடல் மொழியும் சரியாக அமைய வேண்டும். இந்த வேலைக்காக லட்சுமி மேனன் சிறப்பாக மெருகேற்றப்பட்டுள்ளார்.
மேலும், எதிர்பாராத விதமாக, முக்கியமான கதாபாத்திரங்களில் சிம்ரன் மற்றும் லைலா கலக்குகின்றனர். ஆனால், ரெடின் கிங்ஸ்லியின் காமெடி, கதையின் மொத்த ஓட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எம். எஸ். பாஸ்கர், ராஜூ மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா போன்றவர்கள் சில முக்கியமான காட்சிகளில் மட்டுமே தோன்றி செல்லுகின்றனர்.பேய் படம் என்றாலே இசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதுவும், இந்த படத்தில் சப்தமே பேய் என்பதால், இசையமைப்பாளர் தமன், சிறந்த பின்னணி இசையுடன் படம் முழுவதும் அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் செய்த உழைப்பு, திரையரங்கில் பார்க்கும் போது வெளிப்படையாக உணர முடிகிறது.
ஒரு முக்கியமான காட்சியில், வெள்ளை திரையை மட்டும் பயன்படுத்தி, பின்னணி ஒலியின் மூலம் பரபரப்பை உருவாக்கிய விதம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் அழகாக வெளிப்படுகின்றன. ஹாரர் படத்திற்கு தேவையான போட்டோகிராபி மற்றும் ஒளிப்பதிவு வேலைகளை சிறப்பாக செய்துள்ளார்.பேய் படங்களை தொடர்ந்து பார்த்து, அதே மாதிரியான சித்திரங்களை ரசிக்க சலித்திருக்கும் ரசிகர்களுக்கு, “சப்தம்” மூலமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் வழங்குகிறது.