தமிழ் திரைப்படத் துறையில் தற்போது 24 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் அனைத்தும் பெப்சி அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று விசுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த சங்கம் ‘திவா’ என்ற சுருக்கப் பெயரில் அழைக்கப்படுகிறது, அதாவது இன்டர்மீடியட் விஷுவல் எபெக்ட்ஸ் அசோசியேசன்.
இந்த அமைப்பு விரைவில் பெப்சி அமைப்புடன் இணைக்கப்பட இருக்கிறது. இதற்காக நடந்த நிகழ்வில் பெப்சி தலைவர் செல்வமணி பேசுகையில், “முன்பு நான் திரைப்படம் உருவாக்கும் போது, என்னை முன்கூட்டியே பார்ப்பதற்காக நிறைய உடல் உழைப்பும் பண உழைப்பும் தேவைப்பட்டன. அப்போதும் அதன் 40% மட்டுமே அடைய முடியும். ஆனால் இன்று தொழில்நுட்பத்தின் உதவியால், அது முழுமையாக 100% கிடைக்கிறது,” என்று தெரிவித்தார்.

பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் காலகட்டத்தில் தான் திரைப்படத் தொழில் தொழில்நுட்ப கலைஞர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்னர், ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களின் கட்டுப்பாட்டில் திரைப்படத்துறையின் மீது ஆதிக்கம் காணப்பட்டது. ஆனால், 2025 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில், சினிமாவை முழுமையாக விஎப்எக்ஸ், ஏஐ மற்றும் சிஜி தொழில்நுட்பமே ஆதிக்கம் செலுத்தும். இந்த தொழில்நுட்பத்துறையினருக்கென ஒரு தனி சங்கம் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயமாகும்.
உங்கள் திறமையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் மற்றும் திரைத்துறை ஒருங்கிணைந்து வளர முடியும். உங்கள் சங்கத்தை மூன்று வருடங்கள் சிறப்பாக நடத்தினால், பெப்சியில் இணைய வாய்ப்பளிக்கிறோம் என்று கூறியிருந்தேன். தற்போது அவர்கள் இரண்டாவது ஆண்டில் இருக்கிறார்கள். நிச்சயம் பெப்சியில் இணைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, சங்கத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெற முயற்சி மேற்கொள்ளப்படும். தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு ஏற்படாமல், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். நேர்மையும் வாய்மையும் எப்போதும் வெற்றி பெறும்,” என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.