திருச்சியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அதன்பின்னர், அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். அதற்கிடையில் எம்பிஏ படிப்பையும் முடித்துவிட்டு, 2012 பிப்ரவரி 3ம் தேதி வெளியான ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது அறிமுகத்தை நிகழ்த்தினார்.
அதன்பின் அவர் “எதிர் நீச்சல்”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “மான் கராத்தே”, “காக்கி சட்டை”, “ரஜினி முருகன்”, “நம்ம வீட்டுப் பிள்ளை”, “டாக்டர்”, “டான்”, “மாவீரன்” போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான அவரது ‘அமரன்’ திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வர்த்தக ரீதியாக சாதனை படைத்தது.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன், சினிமாவில் தனது பயணத்தின் 13வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். தற்போது அவர் 24வது மற்றும் 25வது திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். 25வது படமாக உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது தனித்திறமையாலும், கடுமையான உழைப்பாலும் உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.