விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், நேற்று வைல்டு கார்டு போட்டியாளரான வர்ஷினி வெங்கட் சிரித்துக்கொண்டே வெளியேறினார். ஆனால், அவர் வெளியேறிய போக்கில் காதல் ஜோடிகளுக்குள் பிரச்னைகளை தூண்டி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இம்முறை சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிந்து விளையாடி வந்தனர். ஆரம்பத்தில் இது புதிய பரிமாணத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பிக்பாஸ் போட்டியின் மொத்த சுவாரஸ்யத்தையும் குறைத்துவிட்டது என்றே கூற வேண்டும் .
இந்த வாரம், பழைய போட்டியாளர்களின் முடிவின் அடிப்படையில், வைல்டு கார்டு போட்டியாளரான வர்ஷினி வெங்கட் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, வீட்டில் உள்ள வெள்ளை கோடு அகற்றப்பட்டு இனி ஆண் பெண் அணிகள் இல்லாமல், அனைவரும் தனித்தனி போட்டியாளர்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க 50 நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட முடிவாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. ஆண்-பெண் அணிகள் இனி இல்லாத நிலையில், அடுத்த 50 நாட்களில் போட்டியாளர்கள் எவ்வாறு தங்களுடைய ஆட்டத்தை நயமாக ஆடப் போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.