பாலிவுட்டில் அடுத்ததாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ள “சிங்கம் அகைன்” மற்றும் முன்னதாக வெற்றிப் பெற்ற இரண்டு பாகங்களைத் தொடர்ந்து கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாகும் “பூல் புலையா 3” ஆகியவை அடங்கும். இந்த இரண்டு படங்களும் நேற்று நவம்பர் 1 ஆம் தேதி வெளியீடாகியுள்ளன. ஆனால், அரபு நாடுகளில் இவ்விரு படங்களுக்கும் வெளியீடு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

“சிங்கம் அகைன்” திரைப்படம் ராமாயணத்தைச் சார்ந்த சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மதத்தைப் பற்றிய சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதனால் அந்தப் படத்தின் வெளியீடு தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, “பூல் புலையா 3” திரைப்படம் தடைசெய்யப்பட்ட தன்பாலின ஈர்ப்பு விவகாரம் குறித்து கொண்டிருப்பதால் அது அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைகளை சரிசெய்து படங்களை அங்கு வெளியிடுவதற்கான முயற்சிகளை இந்த படக்குழுவினர் மேற்கொண்டார்களா என்ற விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.