Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சிறிய படகு பயணத்திற்குள் ஏராளமான செய்திகளைச் சொல்லியுள்ளார் சிம்புதேவன்… போட் திரைப்படம் குறித்து சீமான் கருத்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், அக்ஷத் தாஸ், மதுமிதா, கௌரிகிஷன், சாரா, சாம்ஸ் ஆகியோரது நடிப்பில் உருவான ‘போட்’ படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தினைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

பிரபா பிரேம்குமார் அவர்களின் தயாரிப்பில் அன்புத்தம்பி சிம்புதேவன் இயக்கியுள்ள ‘போட்’ திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். ஒரு சிறிய பெட்டிக்குள் விலைமதிக்க முடியாத புதையலை வைத்ததுபோலச் சிறிய படகு பயணத்திற்குள் ஏராளமான செய்திகளைச் சொல்லியுள்ளார் தம்பி சிம்புதேவன். விறுவிறுப்பான திரைக்கதையும், அழுத்தமான வசனங்களும் 80 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச்செல்கிறது.

மீனவ மக்களின் கடினமான வாழ்க்கையையும், கடக்க முடியா வலியையும் நம் கண்முன் காட்சிகளாக விரியச்செய்யும் கனமான கலைப்படைப்பு இத்திரைப்படம். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் மீனவராகவே வாழ்ந்துகாட்டியுள்ள அன்புத்தம்பி யோகிபாபு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.

அண்ணன் சின்னி ஜெயந்த், அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர், அக்ஷத் தாஸ், மதுமிதா, கௌரிகிஷன், சாரா, சாம்ஸ் ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு படத்திற்குக் கூடுதல் பலம்சேர்க்கிறது. தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு படகோடு நம்மைப் பயணிக்க வைத்து, இறுதிக்காட்சி நெருங்க நெருங்க பதட்டமும், பரபரப்பும் தொற்றிக்கொள்ளுமளவுக்குப் படத்தோடு ஒன்றச்செய்கிறது.

தென்றல் தீண்டுவதுபோன்ற தம்பி ஜிப்ரானின் இசை மனதை இனிதாக்குகிறது. வழக்கமான திரைப்படங்கள் போல அல்லாமல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305இல் கடவுள் போன்று மீண்டுமொரு தனித்துவமான உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் வியக்கவைத்துள்ளார் தம்பி சிம்புதேவன். கடலும் படகும் அதில் பயணிக்கும் சில மனிதர்களும் எனும் குறுகிய வட்டத்திற்குள் சிறிதும் சலிப்புத் தட்டாமல் இரண்டு மணிநேரம் கதைக் களத்திற்குள்ளேயே கட்டிப்போட்டுள்ள தம்பி சிம்புதேவனின் கலைத்திறமைக்கு என் அன்பும், வாழ்த்துகளும்!

‘போட்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து நடிகர்களுக்கும், கலை இயக்குநர் ஐயப்பன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திரைப்படத்தில் பணியாற்றி, மறைந்த கலை இயக்குநர் சந்தானம் அவர்களுடைய திறமை மிகுந்த போற்றுதலுக்குரியது.

நாளை(02-08-2024) வெளியாகும் ‘போட்’ திரைப்படத்தை உலகெங்கும் வாழும் என் பேரன்பிற்குரிய தமிழ் மக்கள் திரையரங்கில் கண்டு களித்து, திரைப்படத்தினை மாபெரும் வெற்றிப்படைப்பாக மாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

Read more

Local News