பிரித்விராஜ், பேசில் ஜோசப், நிகிலா விமல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து மே மாதம் திரையரங்கில் வெளியான “குருவாயூர் அம்பலநடையில்” திரைப்படம், ஓடிடி-யில் வெளியான பிறகு பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. அதே சமயம், இந்தப் படத்தின் மையக்கரு குறித்து சமூகவலைதளத்தில் சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்தப் படத்தின் மையக்கரு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நக்கலைட்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியான “பாய் ஃப்ரெண்ட் அலப்பறைகள்” எனும் வீடியோ கன்டென்ட்டைப் போலவே இருப்பதாக சில பதிவுகள் சோஷியல் மீடியாவில் வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக நக்கலைட்ஸின் கிரியேட்டிவ் ஹெட் ராஜேஷ்வரிடம் பேசினோம்.
குருவாயூர் அம்பலநடையில் படத்தின் ட்ரெய்லர் வந்தபோதே, பாய் ஃப்ரெண்ட் அலப்பறைகள் வீடியோவின் ஸ்கிரிப்ட் ரைட்டர் மகேந்திரனும், அதன் இயக்குநர் சஷ்டி பிரனேஷும், “இந்த கதை நம்ம வீடியோவோட கதை மாதிரி இருக்கு” என என்கிட்ட சொன்னாங்க. அதுக்கு நான், “படம் வந்ததும் பார்த்துக்கலாம்”னு சொன்னேன். படம் வந்த பிறகு இரண்டு கதையும் ஒரே மாதிரி இருந்ததால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு மெசேஜ் அனுப்பினோம். அதற்கு இன்று வரை எந்த பதிலும் இல்லை.
படம் ஓடிடி-யில் வந்த பிறகு மக்களும் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பித்தார்கள். இப்போ இதுக்கு அவங்க பதில் சொல்லிதானே ஆகணும். ஏன்னா, எங்களின் பல வீடியோக்களை நாங்கள் படமாக பண்றதுக்கான முயற்சியிலும் இருக்கோம். அதில் இந்த வீடியோவும் ஒன்று. இனி எங்களால் அதைப் படமாகப் பண்ணவே முடியாது. இந்த ஐடியா எங்களுக்கு முன்னாடியே அவங்களுக்குத் தோணியிருந்து, அந்த கதையை அவங்க பதிவும் செய்திருந்தால் ஓகே. அப்படியில்லை என்றால் இந்தப் பிரச்னை நக்கலைட்ஸ் டீம் சட்டரீதியாக அணுகும் என்றார் ராஜேஷ்வர்.