பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் நடித்துள்ள “ஹரா” திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. கோவையில் கல்லூரியில் படிக்கும் தனது மகள் நிமிஷா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துவிட, தன் மகள் உண்மையில் தற்கொலை செய்தாரா அல்லது கொலையா என்றதை கண்டுபிடிக்கத் தொடங்கும் ஒரு தந்தையின் பாச போராட்டம் தான் இந்த படத்தின் கதை. மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழலை குறித்து “என்னை அறிந்தால்,” “காக்கிச் சட்டை,” “பைரவா” உள்ளிட்ட சில படங்களில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வகையறா படமாகவே “ஹரா” அமைந்துள்ளது.
நடிகர் மோகன் ஆரம்பம் முதல் முடிவுவரை தனது உடல் மொழியாலும் வசனங்களாலும் ரசிகர்களை வசீகரிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில், அவரது வயதுக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளை சண்டை இயக்குநர் நன்றாக உருவாக்கியுள்ளார். மோகனின் மனைவியாக அனுமோல் சில காட்சிகளில் தோன்றி இருக்கிறார். வில்லனாக சுரேஷ் மேனன் நடித்துள்ளார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகளாக நடித்த அனித்ரா நாயர், வனிதா விஜயகுமார், மைம் கோபி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
என்ன நிறை? மோகனின் நடிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது. பல வருடங்கள் ஆனாலும், அவர் தனது நடிப்பு திறனை எளிதில் மறக்கவில்லை என்பதை அனைத்து இடங்களிலும் நிரூபித்துள்ளார். ரசாந்த் இசை மற்றும் பிரகாஷ் முனுசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.
என்ன குறை? மோகனைத் தவிர மற்றவர்களுக்கான கதாபாத்திர வடிவமைப்பு சரியாக இல்லை என்று தோன்றுகிறது. சாருஹாசனை வைத்து வேலு நாயக்கராக காட்டிய இடங்கள் படத்திற்கு உதவவில்லை. கல்லூரி பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது, அதனால் மாணவிகள் தவறான முடிவுகளை எடுப்பது போன்ற விஷயங்களை பல படங்களில் பார்த்து விட்டதால், கதை மற்றும் திரைக்கதையில் புதுமை இல்லை. பாடல்களும் சராசரி ரகத்தில் தான் உள்ளன. மொத்தத்தில், “ஹரா” படம் மோகன் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு.