திருவிளையாடல் படத்தில் வருவது போல, ‘பிரிக்க முடியாதது..’ என்று கேட்டால், ‘சிவாஜியின் நடிப்பும்.. கண்ணதாசனின் வரிகளும்’ என்று சொல்லி விடலாம். கர்ணன் படத்தில் வரும், உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் – காட்சி இதற்கு ஒரு துளி உதாரணம்.
அப்படிப்பட்ட இவர்களிடையே ஒரு மோதலும் நிகழ்ந்தது.
1950களில், சிவாஜி, கண்ணதாசன், ஆகியோர் திராவிட கழகத்தில் செயல்பட்டு வந்தனர். அப்போது சிவாஜி ‘சம்பூரண ராமாயணம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.
இது கண்ணதாசனுக்கு பிடிக்கவில்லை. ‘கடவுள் மறுப்பு கொள்கை உள்ள இயக்கத்தில் இருந்து கொண்டு பக்திப் படத்தில் நடிக்கலாமா’ என நினைத்தார்.
தான் நடத்திக் கொண்டிருந்த ‘தென்றல் திரை’ பத்திரிக்கையில் சிவாஜியை கடுமையாக விமர்சித்து எழுதவும் செய்தார்.
சிவாஜி நடித்த தெனாலி ராமன் படத்தில் ஒரு யானை சிவாஜியின் தலையை மிதிக்கும் போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதே மாதிரியான புகைப்படத்தை வைத்து, ‘இது தான் சிவாஜியின் எதிர்காலம்’ என்றும் கடுமையாக எழுதிவிட்டார்.
இதனால் சிவாஜிக்கு கடுமையான கோபம். ஆகவே அவரது கண்ணில் படாமல் இருந்து வந்தார் கண்ணதாசன்.
ஒரு நாள், வாகினி ஸ்டூடியோவில் ஒரு தளத்தில் சிவாஜி நடித்துக்கொண்டு இருந்தார். இன்னொரு தளத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துக்கொண்டு இருந்தார். அவரைப் பார்க்க கண்ணதாசன் வந்தார். இந்தத் தகவல் தெரிந்ததும் ஆவேசத்துடன் அங்கு வந்துவிட்டார் சிவாஜி.
நிலைமையை உணர்ந்த என்.எஸ். கிருஷ்ணன், இருவரையும் பெரும்பாடு பட்டு சமாதானப்படுத்தி வைத்தார்.
அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்தே, சிவாஜி படங்களுக்கு கண்ணதாசன் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.