கபில்தேவ், தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு ஏற்கெனவே பாலிவுட்டில் திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. அந்த வரிசையில், 1930-களில் இந்திய அணிக்காக விளையாடிய லாலா அமர்நாத்தின் வாழ்க்கையும் தற்போது ‘லால்காரா’ என்ற பெயரில் படமாகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல் சதம் அடித்தவர் லாலா அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் லாலா அமர்நாத் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார். அசுதோஷ் கோவரிகர் இயக்கும் இப்படத்திற்காக அமீர்கான் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
‘83’ படத்தில் பணியாற்றிய இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மேற்பார்வையில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சீரமைப்புப் பணிகள் நடப்பதால், தெற்கு மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி மேற்கொள்வதற்காக கொலாபாவில் உள்ள சொகுசு குடியிருப்புக்கு அமீர்கான் மாறியுள்ளார்.
