அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொலைக்காட்சித் துறைக்கான சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விருது வழங்கும் பிரசண்டராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். இதன் மூலம் எம்மி விருது விழாவில் பிரசண்டராகக் கலந்துகொண்ட முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
விழாவின்போது செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி, “சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறை. இந்த மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ஏற்கெனவே நியூயார்க் வந்திருந்தாலும், இந்த முறை இங்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. இது திட்டமிட்டு மேற்கொண்ட பயணம் அல்ல; எதிர்பாராத வகையில் அமைந்த ஒரு சர்ப்ரைஸ்” என்று தெரிவித்தார்.
‘மகாராஜா’ படத்தின் ஆங்கில ரீமேக்கில் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகேயைச் சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “விருது வழங்கும் பிரசண்டராக மட்டுமே இங்கு வந்துள்ளேன். அதனால் அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்றார்.
