தமிழில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் சிம்புதேவன். நகைச்சுவையுடன் கூடிய கதை சொல்லும் பாணியால் தனக்கென ரசிகர்களைப் பெற்றார்.
இதற்குப் பிறகு விஜய் நடித்த ‘புலி’, ‘கசட தபற’, ‘போட்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால், அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தற்போது விமல் நடிப்பில் ‘நவோரியா’ என்ற புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார் சிம்புதேவன். இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. அவரது முந்தைய படங்களைப் போலவே வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.
