அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘வல்லமை’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘கேடி என்கிற கருப்பு துரை’ ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா இப்படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட படங்களான ‘பாகுபலி’ உள்ளிட்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம் குறித்து பேசிய மதுமிதா, “ஜான் டோ என்பவர் யார் என்பதுதான் படத்தின் மையக் கேள்வி. அவர் பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா என்ற மர்மத்தைச் சுற்றி கதை நகரும். பார்வையாளர்கள் எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காவலர் சீருடையில் அவர் இடம்பெற்றுள்ள போஸ்டரும், மர்மமான கதாபாத்திரங்களின் புகைப்படங்களும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டும்” என்றார்.
இதற்கிடையே, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனது ‘லவ் ஆல்வேஸ்’ வெப்சீரிஸ் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். வயதான தம்பதிகளான ஜெயபிரகாஷ், ஜெயசுதா விவாகரத்து செய்ய முடிவெடுக்கின்றனர். ஒரு கிணற்றில் விழுந்த பிறகு, அவர்கள் ராம்சான் மற்றும் கவுரி கிஷன் ஆகியோராக இளம் தம்பதிகளாக மாறுகின்றனர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை எட்டு எபிசோடுகளாக உருவாக்கியுள்ளதாக மதுமிதா தெரிவித்தார்.
மேலும், அடுத்ததாக இந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தனது படைப்புகள் குறித்துப் பேசும்போது, தன்னை ‘பெண் இயக்குநர்’ என்று அடையாளப்படுத்தாமல், ‘இயக்குநர்’ என்றே குறிப்பிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். “என்னுடைய படங்களைப் பார்ப்பவர்கள் என்னைக் குறிப்பிடும்போது இயக்குநர் என்று சொல்லுங்கள். தயவுசெய்து பெண் இயக்குநர் என்று சொல்ல வேண்டாம்” என மதுமிதா தெரிவித்துள்ளார்.
