நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம், புராணங்களையும் எதிர்கால அறிவியல் கற்பனையையும் இணைத்து உருவாக்கப்பட்டது. மகாபாரதம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கல்கி அவதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், தொழில்நுட்ப ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.1,000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியாகவும் சாதனை படைத்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ‘கல்கி 2’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கான முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
