பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான், சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றைப் பற்றிய ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
2014-ம் ஆண்டு சதீஷ் என்பவர் ரஹ்மானுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில், “அதிகாலையில் என் கனவில் நீங்கள் வந்தீர்கள். அந்தக் கனவு நிஜமாகும் என்றும் நம்புகிறேன். நீங்கள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகெங்கிலும் ராமாயணக் காவியத்தை இசை நிகழ்ச்சிகளாக வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்ததாக ரஹ்மான் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனது கனவைப் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது ‘ராமாயணம்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து வியப்பதாகவும் ரஹ்மான் கூறினார்.
