‘சிக்மா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தாயின் நினைவாக நூலகம் நடத்தி வரும் சந்தீப் கிஷன், தனது தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிக்கலில் இருக்கிறார். நூலகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் பணம் தேடும் முயற்சியில் இறங்கும் அவர், சூதாட்டத்தில் ஈடுபட்டு அங்கும் ஏமாற்றப்படுகிறார். அப்போது சிவ் பண்டிட்டின் போதைப்பொருள் தொடர்பான வீடியோ அடங்கிய பென்டிரைவ் அவரிடம் கிடைக்கிறது. அதை வைத்து பணம் பறிக்க முயலும் சந்தீப்பிடம் எதிர்பாராதவிதமாக வில்லன் சம்பத்தின் ₹1000 கோடி லாக்கர் சாவியும் சிக்குகிறது. இதனால் அந்த சாவியை கைப்பற்ற வில்லன் கும்பல் அவரை துரத்தத் தொடங்குகிறது. கடனை சந்தீப் கிஷன் எப்படி சமாளித்தார், அவரிடம் சிக்கிய லாக்கர் சாவியை வில்லன் கும்பல் கைப்பற்றியதா என்பதுதான் படத்தின் மையக்கதை.

சந்தீப் கிஷன் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் கடனை அடைக்க போராடுவது முதல் சிவ் பண்டிட்டை மிரட்டி பணம் பெற முயல்வது வரையிலான காட்சிகளில் அவரது நடிப்பு படத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது. பரீனா அப்துல்லா துடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரேடியோ தொகுப்பாளராக வரும் அவருக்கு அழுத்தமான காட்சிகள் குறைவு. முதல் பாதியில் சந்தீப்புடன் இடம்பெறும் காட்சிகளே அவருக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.

அன்புதாசன், ராஜூ சுந்தரம், ஷீலா ராஜ்குமார், யோஹ் ஜாபி, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அன்புதாசனின் துறுதுறுப்பான நடிப்பு கவனம் பெறுகிறது. மகாலட்சுமியின் வில்லத்தனமான நடிப்பும் குறிப்பிடத்தக்கது. சம்பத், சிவ் பண்டிட் கதாபாத்திரங்களுக்கு இன்னும் வலுவான எழுத்து இருந்திருந்தால் வில்லன் தரப்பு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

முதல் பாதியில் கதைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் விதத்தில் ஜேசன் சஞ்சய்யின் திரைக்கதை சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் சில கேள்விகளுக்கான க்ளூக்களை முதல் பாதியிலேயே காட்சிகளாக வைத்திருப்பது சாமர்த்தியமான அணுகுமுறை. ஆனால் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று நீளமாகத் தோன்றுகிறது. தேவையற்ற காட்சிகள் மற்றும் சில லாஜிக் மீறல்கள் படத்தின் வேகத்தை பாதிக்கின்றன.

அதே நேரத்தில் தமனின் இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. சில குறைகளைத் தாண்டிப் பார்த்தால், ஜேசன் சஞ்சய்க்கு ‘சிக்மா’ ஒரு நம்பிக்கைக்குரிய இயக்குநர் அறிமுகமாக அமைகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading