கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பான் வேர்ல்டு திரைப்படமாக ஆங்கிலத்திலும் வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான ‘டாக்சிக்’, லாபகரமான படமாக அமைய ரூ.800 கோடிக்கும் மேல் வசூலிக்க வேண்டிய சூழல் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியாகியுள்ள யஷ்ஷின் அடுத்த படமாக இருந்ததால், ‘டாக்சிக்’ மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், படத்தின் விமர்சனங்கள் மற்றும் வசூல் நிலவரம் குறித்து யஷ் வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக கன்னட நடிகர் சுதீப் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கமான வெற்றிப் படத்தின் பாணியை மீண்டும் பின்பற்றாமல், முற்றிலும் மாறுபட்ட முயற்சியை யஷ் மேற்கொண்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற புதிய முயற்சியை எடுக்க தனித்துவமான சிந்தனை, உறுதியான நம்பிக்கை மற்றும் துணிச்சல் தேவை என்றும் சுதீப் குறிப்பிட்டுள்ளார். ‘டாக்சிக்’ ஒரு வித்தியாசமான முயற்சி என்றும், படத்தில் விவாதிக்கவும் கற்றுக்கொள்ளவும் பல அம்சங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வழக்கமான சினிமா பாதையிலிருந்து விலகி புதிய பரிசோதனையை மேற்கொண்ட யஷ்ஷுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள சுதீப்பின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
