மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்றது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய வெற்றிமாறன், ‘மண்டாடி’ திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பான படம் என்று தெரிவித்தார். படத்தின் இயக்குநர் மதிமாறனுடனான தனது நீண்டகால தொடர்பு குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். தனக்கு ‘வெற்றிமாறன்’ என்ற பெயரை வைத்ததே மதிமாறனின் தந்தைதான் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மதிமாறன் தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்றும், தகுதி இருந்தால் மட்டுமே தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்றும் வெற்றிமாறன் பாராட்டினார். அதேபோல் சூரியின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பற்றியும் அவர் மேடையில் பேசினார்.
சில கதாபாத்திரங்களுக்கு மனதளவில் தயாராக இருந்தாலும் உடல் ரீதியாக நடிப்பது கடினமாக இருக்கும் என்றும், சிலருக்கு உடல் திறன் இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போகலாம் என்றும் வெற்றிமாறன் தெரிவித்தார். ஆனால் சூரி மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையான நடிகர் என்று அவர் புகழாரம் சூட்டினார். தனது வளர்ச்சியை சூரி மதித்து செயல்படுவதால்தான் இயக்குநர்கள் கேட்கும் சவாலான விஷயங்களையும் செய்யும் திறன் அவருக்கு இருப்பதாக வெற்றிமாறன் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற சவால்கள் நிறைந்த பல கதாபாத்திரங்களில் சூரி நடிக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
