ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘இருமுடி’ திரைப்படத்திற்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தை முழுமையாக ரசித்ததாகக் கூறியுள்ள அவர், தனது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ரவி தேஜாவின் நடிப்பை குறிப்பாக பாராட்டிய சிரஞ்சீவி, திரிநாத் என்ற கதாபாத்திரத்தை அவர் முழு பொறுப்புடன் தாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தனது கவனத்தை ஈர்த்ததாகவும், அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததாகவும் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சிவா நிர்வாணாவின் பணியையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். கதையை ஆழத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் திரையில் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ள சிரஞ்சீவி, குழந்தை நட்சத்திரம் நக்ஷத்ராவுக்கும் தனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இருமுடி’ படத்தின் வெற்றிக்கு காரணமான அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி, ரவி சங்கர் உள்ளிட்டோருக்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது ஒட்டுமொத்த திரையுலகிற்குமான கொண்டாட்டம் என்றும், திரைத்துறை அனைவருக்கும் சொந்தமானது என்றும் சிரஞ்சீவி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
