‘கர’ திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா அளித்த சமீபத்திய பேட்டியில், இந்தப் படத்தின் கதையை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நிராகரித்தார் என்று தெரிவித்துள்ளார். தமிழில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த ‘போர்த் தொழில்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் விக்னேஷ் ராஜா தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார்.
தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கர’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதில் தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்திய ஒரு பேட்டியில், “போர்த் தொழில் திரைப்படத்தை பார்த்த பிறகு பிருத்விராஜ் சுகுமாரன் என்னை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். பின்னர் ‘கர’ படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு முதலில் பிருத்விராஜ் சாரை தேர்வு செய்திருந்தோம். அவரிடம் கதையை விளக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்தில் இரட்டை தன்மை அதிகமாக இருப்பதால் அது அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். இருந்தாலும் படம் வெற்றி பெறும் என்று வாழ்த்தினார். அதன் பின்னர் இதே கதையை மற்றவர்களிடம் கூறியபோதும் அவர்கள் இதே கருத்தையே தெரிவித்தனர். அதனால் அந்தக் கதாபாத்திரத்தில் மாற்றங்கள் செய்தோம், அதன் பிறகே சுராஜ் சார் இந்தப் படத்தில் இணைந்தார்” என தெரிவித்துள்ளார்
