இந்திய திரையுலகில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல ஜோடியாக நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசப்பட்டு வருகின்றனர். ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த இந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. 2024ஆம் ஆண்டிலிருந்து இருவரும் பல பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளில் தங்களின் துணையின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் காதலில் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் மிகவும் எளிமையாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 4ஆம் தேதி திருமண வரவேற்பு விழாவும் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒருவரை பற்றி ஒருவர் பகிர்ந்த பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இவர்களின் சங்கீத் நிகழ்ச்சி மற்றும் திருமண வரவேற்பு புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில் ராஷ்மிகா–தேவரகொண்டா காதல் மற்றும் திருமணம் குறித்து எழுதியிருந்த ஒரு கட்டுரையை பகிர்ந்த எழுத்தாளர், “சில நேரங்களில் காதலின் உண்மையான சான்று வியப்பாக இருக்கிறது. ராஷ்மிகா மற்றும் தேவரகொண்டாவை பார்க்கும்போது அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவுக்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, நீண்ட காலமாக என்னைப் பற்றி எழுதப்பட்ட ஒன்றைப் படித்து இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. ஆனால் என்னால் சொல்ல முடிவது மிகக் குறைவானவையே. நான் என் சொந்த உலகத்தைத் தேடி கொண்டிருக்கிறேன், அது ஒரு பயணம். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அதை கவனித்ததற்கு நன்றி. அன்பைப் பற்றி நான் சொல்லக்கூடிய ஒன்று என்றால் – உங்களை விடுதலை செய்யும் அன்பைத் தேடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
