சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சிவா மற்றும் சூர்யா காம்போவில் உருவாகும் இப்படம் தான் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படமாகும்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 44 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ஆனால் அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் படப்பிடிப்பு துவங்காமலே உள்ளது. வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிசியாகவும், மறுபக்கம் சூர்யாவும் வெவ்வேறு பட வேலைகளில் பிஸியாக இருந்தனர். இதன் காரணமாக படம் கைவிடப்பட்டதாக பல வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு எல்லாம் தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சில நாட்கள் நடத்தினோம். ஆனால் உண்மையான காளைகளை வைத்து படம் எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க் என்று கருதினோம். எனவே CG மூலம் அக்காட்சிகளை படமாக்கலாம் என முடிவு செய்து படப்பிடிப்பை நிறுத்தினோம். நிச்சயம் வாடிவாசல் படம் வரும். வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்குவார். சூர்யா தான் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பார், அதில் எந்த மாற்றமும் இல்லை. CG வேலைகளுக்காக தான் படப்பிடிப்பு தாமதமானது என்று கூறினார் கலைப்புலி தாணு.