பிரபல இந்திப் பட நடிகையான ஊர்வசி ரவுதெலா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் காணும் பொருட்டு லண்டன் சென்றிருந்தார். அந்த பயணத்தின் போது, கேட்விக் விமான நிலையத்தின் பேக்கேஜ் பெல்டில் இருந்த அவரது சூட்கேஸ் திருடு போயுள்ளது.

அந்த சூட்கேஸில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. சூட்கேஸ் இழந்ததால், அதிர்ச்சியடைந்த ஊர்வசி, இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், விமான நிறுவனம் அவருக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்பதைக் குறித்தும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் ஊர்வசி தெரிவித்ததாவது: “பேக்கேஜ் பெல்டிலிருந்து என் சூட்கேஸ் திருடப்படுவது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது விமான நிலைய பாதுகாப்பு முறையை சந்தேகிக்க வைக்கும் விஷயமாகும்,” என பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசாரும், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.