மலையாள திரையுலகில் “திரிஷ்யம்” படத்தின் மூலம் நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை உருவாக்கினார்கள். தொடர்ந்து, “திரிஷ்யம்-2”, “டுவல்த்மேன்”, “நேர்” போன்ற இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் “ராம்” என்ற ஒரு பிரமாண்ட பட்ஜெட்டிலான படத்தை தொடங்கினர். ஆனால், கொரோனா காலத்தில் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, இவர்கள் கூட்டணியில் மூன்று படங்கள் வெளியானபோதும், “ராம்” படம் எப்போது வெளிவரும் என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.இந்த நிலையில், சமீபத்தில் “ராம்” படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.இப்படத்தில் திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. மோகன்லால் இதில் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இந்தப்படத்தில் மோகன்லாலின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த தீம் சாங் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் வினாயகன் சசிகுமார் இந்த பாடலை எழுதியுள்ளார். இதற்கான தகவலையும் சமீபத்தில் அவர் தெரிவித்தார்.