விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டிணம்’ படத்தில் ஆங்கிலேயப் பெண்ணாக அறிமுகமானவர், ஆங்கிலேய மாடலான எமி ஜாக்சன். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய புகழைத் தந்தது. பின்னர் தமிழில், “ஐ, 2.0, தெறி, கெத்து, தங்கமகன், மிஷன் சாப்டர் 1′ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் ஜார்ஜ் பனாயிட்டோ என்பவருடன் காதலித்து வந்த எமி, அவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் நடக்கவில்லை. 2019ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் எமி. அதன் பின்னர், அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின், தனது மகனை எமி தனியாக வளர்த்து வந்தார்.
அடுத்ததாக, ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை எமி அடிக்கடி பகிர்ந்தார். சமீபத்தில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், இத்தாலியில் உள்ள காசெல்லோ டி ரோக்கோ நகரில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘வாழ்க்கையின் பயணம் இப்போது ஆரம்பமாகிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.