சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘இஎம்ஐ – மாதத் தவணை’. இந்த படம் காமெடி கலந்த சென்டிமென்ட் வகையில் உருவாகியுள்ளது. சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சாய் தான்யா நாயகியாக நடித்துள்ளார். மேலும், பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பேசுகையில், “நான் என் முதல் படத்துக்காக ஒரு மோசமான கதையை வைத்திருந்தேன். ஆனால், உதவி இயக்குநராக வேலை செய்யத் தொடங்கிய பிறகு, அந்தக் கதையைத் தூக்கி எறிந்துவிட்டேன். பின்னர் நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுக்கலாம் என முடிவு செய்து கதை அமைத்தேன்.
மலையாள திரைப்படங்களில் போலி கற்பனைகள் தேடி நகர, கிராமங்கள் மாறி படம் எடுப்பதில்லை. அவர்கள் நேரடியாக வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை கதையாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சீக்கிரம் படம் எடுக்கிறார்கள். அதிக செலவில் செட்கள் அமைக்க வேண்டியதில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியதுமில்லை. நம்முடைய வாழ்க்கையிலிருந்தே கதையை எடுத்தால் அந்த படம் வெற்றி பெறும். ‘இஎம்ஐ’ என்றால் அனைவரும் அனுபவிக்கக்கூடிய ஒன்று. அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தி வாழ்வதைத் தான் இப்படம் பேசுகிறது. காமெடியுடன் அந்தக் கருத்தை சொல்லி இருந்தால் மக்கள் அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்,” என தெரிவித்தார்.