1990களில், தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்தவர் செளந்தர்யா. ரஜினிகாந்துடன் “அருணாச்சலம்”, “படையப்பா”, கமலஹாசனுடன் “காதலா காதலா”, விஜயகாந்துடன் “தவசி”, “சொக்கத்தங்கம்” உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்காக பல விருதுகளையும் வென்றார். பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில், செளந்தர்யாவும் அவரது சகோதரரும் உயிரிழந்தனர். செளந்தர்யாவின் மரணத்திற்குப் பின்னரும், அதில் பல மர்மங்கள் இருக்கலாம் என்கிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில், ஒரு பிரபல தெலுங்கு நடிகருக்கு செளந்தர்யாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி ஒருவர் குற்றச்சாட்டு வைத்ததால், தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சை மிகுந்த விவகாரத்திற்குப் முடிவு கட்டும் வகையில், செளந்தர்யாவின் கணவர் ரகு ஜி.எஸ் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது, “கடந்த சில நாட்களாக, ஹைதராபாத் நிலம் தொடர்பாக, மிஸ்டர் மோகன் பாபு மற்றும் செளந்தர்யா பற்றிய பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. எனது மறைந்த மனைவி செளந்தர்யாவின் எந்த நிலத்தையும் மோகன் பாபு சார் ஆக்கிரமிக்கவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இதுபற்றி எங்களுக்கு இடையே எந்தவொரு பரிவர்த்தனையும் நடந்தது இல்லை. மோகன் பாபு சார் எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர். எங்கள் குடும்பங்கள் பரஸ்பர அன்புடன் பழகி வருகின்றன.அதேபோல், செளந்தர்யாவின் மரணத்திற்கும், மோகன் பாபு சாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. தயவுசெய்து இத்தகைய வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். இந்த விளக்கத்தால், செளந்தர்யாவின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.