குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, சில நாட்களில் பூனாவில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு, வரும் ஆகஸ்ட் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான செட் வேலைகள் சென்னையில் நடந்து வருவதாகவும், படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஜப்பான் பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்த நிலையில், மலையாள நடிகர் நஸ்லனும் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது ஜெயிலர், ஜப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சுனிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜித்துடன் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சுனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள சூழலில், அஜித்திற்கு ஜோடியாக யார் நடிக்கின்றனர் என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.
படத்தில் ஸ்ரீலீலா இணைந்துள்ளார், ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அஜித்தின் ஜோடி நடிகை பற்றி விரைவில் படக்குழுவினர் பதில் அளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் மீனா, சிம்ரன், நயன்தாரா போன்ற நடிகைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறார், இதில் ஒரு வேடம் நெகட்டிவ் ஷேடில் அமைந்துள்ளது. வரலாறு படத்திற்கு பிறகு, அஜித் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.