மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘பனி’. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றதுடன், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும், அதன் தரத்தையும் அழகிய இயக்கத்தையும் பாராட்டி, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். குறிப்பாக, நடிகர் சூர்யா, இயக்குநர் அனுராக் காஷ்யப், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தின் மீது தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
‘பனி’ திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் இணைந்து அமைத்துள்ளனர், இது கதையின் உணர்வுகளை மெருகூட்டியதாக அமைந்துள்ளது.
இந்தநிலையில், ‘பனி’ தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் பிரசாத் லேப்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகரும் இயக்குநருமான ஜோஜு ஜார்ஜ், நாயகி அபிநயா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
‘பனி’ திரைப்படம் தமிழில் நாளை தமிழகம் முழுவதும் வெளியீடாக உள்ளது. இதற்கிடையில், படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.