நகைச்சுவை கலந்த கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாண்டியராஜன். தற்போது சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விமான நிலையத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளந்தியாக பேசும் பாணியும், சுறுசுறுப்பான நடையுடன் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த நடிகர் பாண்டியராஜன். இவரின் படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை. பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜன், அந்த 7 நாட்கள், மெளன கீதங்கள், தூறல் நின்னு போச்சு, விடியும் வரை காத்திரு, இன்று போய் நாளை வா போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

அதன் பிறகு தனியே கன்னிராசி படத்தை இயக்கினார். இந்த படம் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது. இதையடுத்து, ஆண் பாவம் படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றியை குவித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று 225 நாட்களுக்கும் மேலாக ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் பல படங்களை இயக்கியும், ஹீரோவாக நடித்த பாண்டியராஜன், தற்போதைய நிலையில் துணை நடிகராக சில படங்களில் நடிக்கிறார்.

பாண்டியராஜன் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்க வில்லை. மனதில் ஒரு கரு தோன்ற வேண்டும். அது தோன்றினால் படம் எடுக்கலாம். முன்பு ஒரு படத்தை சுவாரஸ்யமாக எடுக்க எப்படி முடியும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, மக்களை எப்படி திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதை பற்றியே யோசிக்க வேண்டியிருக்கிறது,” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய பாண்டியராஜன், “ஒருமுறை அவரை விமான நிலையத்தில் பார்த்தேன். அவர் என்னை பார்த்தது போல இருந்ததால், கையை அசைத்தேன். ஆனால், ரஜினி கை அசைக்கவில்லை. சரி, அவர் நம்மை பார்க்கவில்லை என்று நினைத்தேன். மறுநாள் காலை எனக்கு போன் வந்தது. ‘நேற்று விமான நிலையத்தில் கையை அசைத்தீர்கள் பார்த்தேன். ஆனால், அந்த சூழ்நிலையில் எனக்கு கையை அசைக்க முடியவில்லை. மன்னிக்கவும்,’ என்றார். அந்த பண்பால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்,” என்று கூறினார்.