தமிழில் ஓமை கடவுளே, ‘லாக்கப்’, ‘மலேசியா டூ அம்னீசியா’, ‘மிரள்’, பாயும் ஒளி நீ எனக்கு ‘லவ்’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் வாணி போஜன். இவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,”சிலர் என்னிடம், ஏன்… 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறீங்களே…என்று கேட்பதுண்டு.
இதற்கு தயங்கினால், ஒரு நடிகையாக நான் இருப்பதற்கு அர்த்தமே இல்லை. 50 வயதுக்குப் பிறகும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை. இந்த கருத்தில், நடிகைகளுக்கு தயக்கம் தேவையில்லை. எந்த கதாபாத்திரத்தையும் மனதார ஏற்று நடிக்க வேண்டும். அதுவே நம்மை பேச வைக்கும்.
ஒரு படத்தில் நடிப்பது பலருக்கும் பெரிய கனவு. அதேபோல, அந்த படத்தை ரிலீஸ் செய்வது கூட சிரமமானது. நாம் நடித்து, சம்பாதித்து, அடுத்தடுத்த படங்களை நோக்கி பயணிக்கிறோம். ஆனால், இயக்குநர்கள் உயிரை கொடுத்து படத்தை உருவாக்குகிறார்கள். படம் வெற்றி பெறுமா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் விரும்பி, ஆர்வத்துடன் நடிப்பேன்” என்று கூறினார்.
வாணி போஜன் தற்போது விதார்த்துடன் இணைந்து எஸ்.பி சுப்புராமன் இயக்கத்தில் அஞ்சாமை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் கொடுமையையும் அதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.