ரஜினிகாந்த் நடித்துள்ள “வேட்டையன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியிடப்படும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று, இப்படத்தில் இருந்து “மனசிலாயோ” என்ற பாடல் வெளியானது. அதில் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியதாவது, “ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, சூப்பர் நடிகரும் கூட. ஆனால் அவர் எப்போதும் தன்னை ஒரு நல்ல நடிகராக குறிப்பிடவில்லை. அவருக்குள் ஒரு பிரமாதமான நடிகர் இருக்கிறார். இயக்குனரை அவர் மதிக்கும் விதம் மிக அருமை. இயக்குனர் சொல்வதையெல்லாம் அவர் செய்வார். தனது விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட, அவர் யோசிக்காமல் நடித்துவிடுவார்.
இதனால்தான் அவர் எப்போதும் ரசிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பிடித்தமான நடிகராக இருக்கிறார். குறிப்பாக, இரவில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொன்னால், எந்த விதமான எதிர்ப்பு இல்லாமல் இரவு 2 மணிக்கும் சென்று கலந்து கொள்வார். இன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு நேரம் கடைப்பிடிப்பார்களா என்பது சந்தேகம். மேலும், அவர் ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வரவில்லை. தொழிலை நேசித்த காரணத்தினால்தான் அவர் இத்தனை காலமாக சினிமாவில் நிலைத்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.