மதுரையை சேர்ந்த ராமர், நாடக உலகில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர், தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இவரின் பெயரையே வைத்து, ‘ராமர் வீடு’ என்ற தனிப்பட்ட நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. சில திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தாலும், அவை பெரிதாக கவனம் பெறவில்லை. இது, சின்னத்திரையில் காமெடியில் கலக்கும் ராமரால் சினிமாவில் ஏன் ஜெயிக்க முடியவில்லை? என்ற கேள்வியை எழுப்புகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154779.jpg)
இந்நிலையில், ‘அது வாங்குனா இது இலவசம்’ என்ற திரைப்படத்தின் மூலம், அவர் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீஜா சினிமாஸ் சார்பில் செந்தில் ராஜன் தயாரித்து, இயக்கியுள்ளார். கதாநாயகியாக, கன்னட நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை அர்வின் ராஜ் அமைத்துள்ளார், ஒளிப்பதிவை விக்னேஷ் மலைச்சாமி செய்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154778-1024x576.jpg)
படத்தைப் பற்றி இயக்குநர் செந்தில் ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால், மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இதுவரை சின்னத்திரையில் மட்டுமே ரசித்த ராமரின் புதிய முகத்தை இந்தப் படத்தில் காணலாம். இப்படத்திற்குப் பிறகு, வடிவேலுவைப் போலவே மிகப்பெரிய அளவில் பேசப்படும் நடிகராக அவர் மாறுவார்” எனத் தெரிவித்தார்.