நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர், மேலும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படக்குழு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். படக்குழு சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டது. அப்போது, வெங்கட் பிரபு, நடிகர் அஜித்தை சமீபத்தில் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில், விடா முயற்சி படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் முடிவடைந்தன. அப்போது, வெங்கட் பிரபு, நடிகர் அஜித் குமாரை சந்தித்தார். “அங்கு, நாங்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். பல ப்ராஜக்ட்களை பற்றி கலந்துரையாடினோம். விஜய் மற்றும் அஜித்தை ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்பதை அவர்கள் இருவரும் அறிவார்கள். மங்காத்தா 2 திரைப்படத்தை, நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவரது ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். பல விஷயங்களைப் பற்றி பேசினோம். அது எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என தெரியாது,” என நகைச்சுவையாக கூறினார்.