தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான நடிகை மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் பல முக்கியமான படங்களில் தோன்றியுள்ளார். சமீபத்தில் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில், சாய் விஷ்ணு என்பவரை மேகா ஆகாஷ் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதுவரை அதை வெளிப்படையாக பேசாமல் இருந்த அவர், முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “என் கனவு நனவாகியுள்ளது. இனி என்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.