“25 வருடங்களாக எனக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கவில்லை..?” – கே.பாலசந்தரிடம் சண்டையிட்ட பிறைசூடன்

பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சொந்த ஊரான நன்னிலத்தைச் சேர்ந்தவர்.

இவர் பள்ளி மாணவராக இருந்தபோது கே.பாலசந்தரும், ரஜினிகாந்தும் ஒரு படத்தின் விழாவுக்கு அந்த ஊருக்கு வந்தபோது அவர்களை வரவேற்று வாழ்த்துப் பா பாடிய அனுபவம் கொண்டவர்.

பின்னாளில் சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னை கிளம்பி வந்திருக்கிறார். கே.பாலசந்தரை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது, “செய்யலாம்பா.. கொஞ்சம் வெயிட் பண்ணு..” என்று சொல்லியிருக்கிறார் கே.பி. ஆனால் அவர் இறக்கின்றவரையிலும் ஏனோ பிறைசூடனுக்கு அவர் வாய்ப்பே தரவில்லை. இது பிறைசூடனுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தைத் தந்திருக்கிறதாம்.

இது பற்றி இயக்குநர் சிகரத்திடம் தான் ஒரு முறை கேள்வி கேட்டதாகச் சொல்கிறார் பிறைசூடன்.

“நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராக இருந்தேன். அப்போது விசு தலைவராக இருந்தார். அந்தச் சமயத்தில் மூத்த எழுத்தாளர்களைக் கெளரவித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, 5000 ரூபாய் சன்மானமாகச் சங்கத்தின் சார்பாகக் கொடுக்கலாம் என்று சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் பேசி முடிவெடுத்திருந்தோம்.

அப்போது அந்த லிஸ்ட்டில் கே.பி.யின் பெயரும் இருந்தது. ஆனால், அவர் ரொம்பப் பெரியவர். அவருக்கு ஐந்து லட்சம்ன்னா கொடுக்கலாம்.. இந்த 5000 ரூபாய் கொடுத்தால் நல்லாயிருக்காதே.. என்றெண்ணி அவரைத் தவிர மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.

இது தெரிந்த கே.பி. இயக்குநர் விசுவுக்கு போன் செய்து “என் தாய் வீட்டுச் சீதனத்தை எனக்கு மட்டும் கொடுக்கலியே..” என்று கேட்டிருக்கிறார். உடனேயே விசுவும் என்னிடம் இதைச் சொல்ல.. எழுத்தாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சூழ நாங்கள் கே.பி.யின் வீட்டுக்கே போய் அவருக்குரிய மரியாதையைச் செய்தோம்.

அப்போது அத்தனை நாட்களாக எனக்குள் இருந்த அந்தக் கேள்வியை அவரிடத்தில் அன்றைக்கு கேட்டேன். “இந்த 25 வருஷத்துல ஒரு படத்துக்குக்கூட நீங்க என்னைக் கூப்பிடலையே.. ஏன் ஸார். என் புலமை மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா..?” என்று கேட்டேன். அவரும் தர்மசங்கடத்துடன்.. “ஸாரி பிறை.. கொடுக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். ஏதோ தள்ளித் தள்ளிப் போய் முடியாமல் போயிருச்சு..” என்றார்.

நான் அந்த நேரத்துல கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் 25 வருடங்களாக நான் என் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த கேள்வி என்பதால் தவிர்க்க முடியாமல் கேட்டுவிட்டேன்..” என்கிறார் பிறைசூடன்.