தமிழில் வெளியான முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்களை தற்போதைய தொழில்நுட்பத் தரத்தில் மேம்படுத்தி, டிஜிட்டல் வடிவில் மறுபடியும் திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தன்று விஜய் மற்றும் ஜெனிலியா நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸாகும் நிலையில் உள்ளது.
இந்தப் படத்தை இயக்கியவர் ஜான் ஆர்.பேப்டிஸ்ட். படத்தை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆவார். இந்த படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘சச்சின்’ திரைப்படம் வெளியானது இப்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் இருப்பதால், இதனை ஒட்டி வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் மறுமுறையாக வெளியாக உள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படம் தற்போது உயர் தரம் கொண்ட 4K வடிவத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், தயாரிப்பாளர் தாணு ‘சச்சின்’ திரைப்படத்தின் புதுப் பதிப்பு டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.