எம்.ஜி.ஆருக்கு கோடானு கோடி ரசிகர்கள் உண்டு.. அதில் பிரபலங்களும் உண்டு. அவர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். தான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகர் என்று அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரே, விஜயகாந்தின் படத்தை… அதில் இடம் பெற்ற பாடலை மிகவும் விரும்பினார், ரசித்தார் என்பது ஆச்சரியம்தானே!
விஜயகாந்த் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் உழவன் மகன். இப்படத்தை இயக்கிய அரவிந்தராஜ் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அப்போது, “இந்த படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘இது நான் நடிக்க வேண்டிய படம்’ என்று கூறியிருந்தார்.
உழவன் மகன் வெளியாகி 7 வருடங்கள் கழித்து எனது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கருப்பு நிலா என்கிற படம் உருவானது.
படத்தின் சில காட்சிகள் எம்.ஜி.ஆரின் ராமபுரம் தோட்டத்தில் இருந்த காது கேளாதோர் பள்ளியில் எடுக்கப்பட்டது. அதற்காக நானும், விஜயகாந்தும் அங்கே சென்றோம். அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். மறைந்துவிட்டார். அவரது மனைவி ஜானகி, எங்களை வரவேற்றார்.
விஜயகாந்திடம் ‘உழவன் மகன் படத்தில் மாட்டு வண்டி ஓட்டிகொண்டே நீங்கள் பாடும் பாடலை வீடியோவில் திரும்ப திரும்ப போட்டு பார்த்து ரசிப்பார்’ என சொன்னார்” என்றார் அரவிந்த்ராஜ்.