Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

வேலன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆரம்பக் கால சிவகார்த்திகேயன் படங்களின் சாயலில் வந்திருக்கும் படம் இது. எதார்த்தமான காமெடிகள் சினிமாவில் எப்போதுமே எடுபடும். ‘களவாணி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் எல்லாமே எதார்த்த காமெடியால் மக்களின் மனதை தொட்ட படங்கள்.

பெஸ்டிவல் நேரங்களில் இப்படியான படங்கள்தான் வசூல் விசயத்தில் சினிமாவை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். கவின் இயக்கத்தில் பிக்பாஸ் முகேன் நடிப்பில் வந்திருக்கும் இந்த ‘வேலன்’ படம் அந்தப் புத்துணர்ச்சியை தருகிறதா? முதலில் கதையைப் பார்ப்போம்.

ஹீரோ முகேன் பள்ளிப் படிப்பில் மிக சுமாரான மாணவன், அதை தன் அப்பா பிரபுவிடம் மறைத்து வருகிறார். ஒரு கட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக பிரபுவிற்கு விசயம் தெரிய வருகிறது. மகன் மீது கோபப்படுகிறார் பிரபு.

பின்னர் ஒரு வழியாக படிப்பில் தேறி கல்லூரிக்குள் செல்கிறார் முகேன். அங்கு அவருக்கு ஹீரோயினோடு காதல். அந்தப் பெண் மலையாளி என்பதால் அவருக்கு மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி கொடுக்கிறார். அந்தக் கடிதம் மூலம் ஒரு பெருங்குழப்பம் நடக்கிறது.

தம்பி ராமையா தன் பெண்ணுக்கு முகேன் கடிதம் கொடுத்ததாக பிரபுவிடம் சொல்ல, பிரபுவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார். எல்லாம் சுபம் என்று பார்த்தால் இந்த இடத்தில் யாரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் நடக்கிறது.

மேலும் ஹரிஷ் பேரொடிக்கும் பிரபுவிற்கும் இன்னொரு கதை ஒன்று ஓடுகிறது.  அடுத்தடுத்து என்ன நடந்தது? காதலித்தப் பெண்ணை முகேன் கைப்பிடித்தாரா? என்பதே இந்த வேலன்’ படத்தின் கதை.

முகேன் புதுமுகம்-அறிமுகம் என்ற எந்தப் பதட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார். அவரது சிரித்த முகம் எல்லோரும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகளில்கூட கலங்கடிக்கிறார்.

நாயகிக்கு பெரிய வேலை ஒன்றும் பெரியதாக ஸ்கோப் இல்லை. என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக நடித்துள்ளார்.  பிரபுவிற்கு ஒரு பெரிய மனிதருக்கான கேரக்டர். சிறப்பாகச் செய்து அசத்தி இருக்கிறார். இன்னும் கதையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

தம்பி ராமையா ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ஹரிஷ் பேரொடியை இயக்குநர் இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். மிகச் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகர் அவர்.

படத்தின் முக்கியத் தூணாக இருந்து படத்தை காப்பாற்றி கரை சேர்ப்பவர் சூரிதான். பின்பாதி படத்தை மொத்தமாக தன் தோளில் தூக்கிச் சுமக்கிறார். அவரின் காமெடி ஒரு சில படங்களில்தான் மிக நன்றாக எடுபடும். இந்தப் படத்தில் அது நடந்துள்ளது.

படத்தில் எல்லா ஷாட்களுமே ஒரு பெரிய படத்தைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது பெரிய ப்ளஸ். அதற்கு காரணமான கேமராமேன் பாராட்டுக்குரியவர். பின்னணி இசையும், பாடல்களும் படத்தை கமர்சியல் களத்திற்குள் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

என்னதான் பக்கா கமர்சியல் படம் என்றாலும் இவ்வளவு லாஜிக் மீறல் இருக்க வேண்டுமா..? பிரபுவிடம் முகேன் தனது காதலைச் சொல்லத் தயங்குவதற்கான காரணம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.  இடைவேளைக்குப் பிறகு காமெடியில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால்  பேமிலியோடு சென்று இந்த ‘வேலனை’ ஒரு முறை பார்த்து வரலாம்.

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News