தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண், தனது 16-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது தற்காலிகமாக ‘ஆர்.சி 16’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இது ராம் சரணும் ஜான்வி கபூரும் ஒன்றாக இணையும் முதல் திரைப்படமாகும்.

புச்சி பாபு இயக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றுகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது அந்த கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், அடுத்த கட்டமாக டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படக்குழு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, இன்று நடிகர் ராம் சரணின் பிறந்த நாளையொட்டி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் இந்தப் படத்திற்கு ‘பெடி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.