‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகராக மாறியவர் சசிகுமார். தனது குழந்தைத்தனமான முகத்தோற்றம் மற்றும் மதுரைத்தமிழ் பேச்சு மூலம் பல படங்களில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், மதுரையில்தான் வாழ்ந்துவருகிறார். எந்தப் படத்தின் படப்பிடிப்பு எங்கே என்றாலும், அவர் மதுரையிலிருந்து நேராக அங்கே சென்று, வேலை முடிந்தவுடன் மீண்டும் மதுரைக்குத் திரும்பிவிடுகிறாராம்.

இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, ஒருமுறை ஒரு மலையாளப் படத்தில் நடித்தபோது, அங்குள்ள நடிகர்களின் வாழ்க்கையை கவனித்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த ஊர்களிலேயே இருந்து நடித்துக் கொண்டு இருந்தார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். அவர்கள் விவசாயியாகவோ, வியாபாரியாகவோ, சமூக சேவகராகவோ வேறொரு முகமூடியுடன் வாழ்கிறார்கள். இது எனக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது.
அதன்பிறகு, ‘ஏன் நாம மட்டும் சென்னையிலேயே இருக்கணும்? நம்ம ஊர், நம்ம மண் என்ற எண்ணத்துடன் கிராமத்திலேயே வாழலாம்’ என்ற எண்ணம் வந்தது. சினிமாவை வீட்டுக்குள் கொண்டுவரக் கூடாது. இங்கே சினிமாவைப் பற்றி யாரையும் சந்திக்க முடியவில்லை. ஷூட்டிங் இல்லாத நாட்களில், நான் விவசாயம் செய்து கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.
என் ஊரில் யாரும் என்னுடன் செல்பி எடுக்க வருவதில்லை. ரோட்டில் நடந்து கடைக்குப் போய்விடுவேன், சைக்கிளில் பயணிக்கிறேன். வீட்டுக்கு வெளியே நிற்பேன், எல்லோரும் என்னை ‘மாமா’, ‘மச்சான்’ என்று அழைத்து பேசுகிறார்கள். சினிமா என்பது நிரந்தரமல்ல. சினிமா என்ற துறை நீடித்தாலும், அதில் நடிக்க வருகிறவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.சினிமாவுக்குள் இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் நிரந்தரமாக இருக்க முடியாது. சினிமா எனும் துறையில் இருக்கிறோம் என்பதற்காக தலைக்கனம் கொண்டு நடக்காமல் இருக்க இந்த கிராமத்து வாழ்க்கை உதவியாக இருக்கிறது. கிராம மக்கள் என்னை ஒரு சாதாரண மனிதராகவே நடத்துகிறார்கள். இந்த அமைதியையும், குடும்ப ஒற்றுமையையும் தொலைக்கக்கூடாதென்று எண்ணுகிறேன்” என சசிகுமார் கூறியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .