தமிழ்ச் சினிமாவில் சமீப நாட்களாக வித்தியாசமான தலைப்புகளில் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
அந்த வரிசையில் அடுத்து வரக் கூடிய திரைப்படம் ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.
‘கபாலி’ திரைப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பேசிய பன்ச் வசனத்தையே இந்தப் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
‘அல்லு அம்ரு நன்னு சினிமாஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் மெஹபூப்கான் மற்றும் யாசிம்கான் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் டயஸ் குமார், பிரசாத் சிவரம், கிருஷ்ணப் பிரியா, குலப்புள்ளி லீலா, சுமேஷ் தச்சநாடன், வாஹித் ரஹீம், நிவ்யா, சனிலா செபாஸ்டியன், சிவா, ஷாஜகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான காதர்கான் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் மாஸ்டர் மஹேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் காதர்கான் பேசுகையில், “இத்திரைப்படம் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் 5 பாடல்கள் உள்ளது. இதில் ஒரு பாடலை பிரபல பாடகர் அந்தோணி தாசன் பாடியுள்ளார். இந்த பாடல் தளபதி விஜய் சார்க்கு டெடிகேட் செய்திருக்கிறேன். இதுவொரு நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதை. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயமாக இருக்கும். படத்தின் இசை மிக விரைவில் வெளியிடப்படும். வரும் மார்ச் மாதம் திரைப்படம் திரைக்கு வரும்…” என்றார்.