நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ‘சர்தார் 2’ படத்தில் புதிதாக மாளவிகா மோகனும், வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்துள்ளனர்.
இந்தச் சூழலில், திரைப்படக் குழு சார்பாக சென்னையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஆகியோர் பங்கேற்றனர். மித்ரன் அடுத்து எதைச் சொல்லி பயமுறுத்தப் போகிறார் என்று எல்லோரும் கேட்கிறார்கள். முதல் படத்தில் (இரும்புத்திரை) மொபைலில் மெசேஜ் வந்தாலே பயமாக இருக்கும், அடுத்த படத்தில் (சர்தார் 1) தண்ணீர் பாட்டிலைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.
இந்தப் படத்தில் அதைவிட பயங்கரமான ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். உண்மையிலேயே இந்தப் படத்தில் அச்சுறுத்தும் ஒரு மிகப்பெரிய விஷயத்தைத் தொட்டிருக்கிறார். வில்லன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறானோ, அதை வைத்துதான் ஹீரோ எவ்வளவு நல்லவன் என்பது தெரியும். சண்டையிடும் இருவரும் மிகப்பெரிய ஆளாக இருந்தால்தான் போர் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இந்தப் படம் ஒரு மிகப்பெரிய போரைப் பற்றி பேசுகிறது. எதிரே எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார் என்றதும் மிகவும் சந்தோஷமடைந்தேன். மித்ரனுக்கு ஒரு பழக்கம் உண்டு, முதலில் பிளாஷ்பேக்கைத்தான் எடுப்பார். ஷூட்டிங் செட்டைப் பார்த்து பயந்துவிட்டேன். இன்று தயாரிப்பாளராக இருப்பது சுலபமல்ல. வெறும் ஐடியாவையும் உழைப்பையும் மட்டுமே நம்பி பெரிய ரிஸ்க் எடுக்கிறார்கள்.
அந்த அளவுக்கு இந்தப் படத்தில் மித்ரனின் உழைப்பை முக்கியமாகப் பார்க்கிறேன்.எல்லோருக்கும் இது புரிய வேண்டும், சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடிப்புத் தீனி எவ்வளவு கொடுத்தாலும் அவருக்கு போதாது. அவர் கேட்டு கேட்டு செய்யும்போது பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவர் செட்டில் நாங்கள் செல்போனைத் தொடவே இல்லை. அவரிடம் இருந்து தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும். ‘கைதி’க்குப் பிறகு நானும் சாம் சி.எஸ்ஸும் இணைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.